Sunday, May 4, 2025

போர் அச்சத்தில் பாகிஸ்தானியர்கள்! பள்ளிகள் மூடல், உணவு பொருட்களை சேமித்து வைக்கும் மக்கள்! பதுங்குகுழிகளில் தஞ்சம்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது மத்திய அரசு வெவ்வேறு விதங்களில் நடவடிக்கைகளை எடுத்தபடியே இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்ததாக இருக்கட்டும், பாகிஸ்தான் உடனான அரசியல் ரீதியான உறவை முறித்துக் கொண்டதாக இருக்கட்டும், இந்திய வாழ் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவாக இருக்கட்டும்… இந்தியாவின் அதிரடி தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

நிலைமை இப்படி இருக்க நெருக்கடியை எதிர்கொள்வதற்கு பாகிஸ்தானும் தன் தரப்பில் ரெடியாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக எல்லை பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே இருக்கக்கூடிய கிராமங்களில் எல்லாம் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் பள்ளிகள் அனைத்து மூடப்பட்டு அவை அனைத்தும் பயிற்சி மையங்களாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் AFP வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எப்படி தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது, முதலுதவி செய்வது என்பன உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் தற்போது ஆள் அரவமற்று காணப்படுவதோடு அங்கு இருக்கும் தங்கும் விடுதிகள் அனைத்தும் காலியாக செய்யப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதாக சொல்லபப்டுகிறது.

மேலும் எல்லையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் வரையுள்ள கிராமங்களில் பங்கர் அமைத்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள் என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல அனைவருக்கும் உணவு, மருந்து மற்றும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3.5 மில்லியன் டாலர்கள் பணத்தை தயாராக வைத்திருப்பதாக கூறப்படுவது பாகிஸ்தான் போர் அச்சத்தில் பிடிபட்டுள்ளதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Latest news