Thursday, February 19, 2026

டெல்லி ‛அட்டாக்’-கின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவமா? பாக்., பத்திரிகையாளர் போட்ட அதிரடி பதிவு!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேற்று முன்தினம் மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் நுழைவு வாயிலில் நின்றிருந்த ஹூண்டாய் ஐ20 கார் திடீரென வெடித்தது. இதனால் 13 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன; 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்ட தகவலின்படி, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் உமர் ஓட்டிய கார் வெடிப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காரில் டெட்டனேட்டர், அம்மோனியம் நைட்ரேட், எரிபொருள் எண்ணெய் உள்ளிட்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், கைதான டாக்டர் அடீல் அகமது ராதர் மற்றும் ஃபரிதாபாத் பகுதியைச் சேர்ந்த டாக்டர் முஜாமில் ஷகீல் ஆகியோருக்கும் இந்தத் தாக்குதலுடன் தொடர்பு இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் பத்திரிகையாளர் தாஹா சித்திக் தனது எக்ஸ் X பக்கத்தில், ‘கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியிலும் இஸ்லாமாபாத்திலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான் ராணுவம் தற்கொலைப்படை வீரர்களை தனது சொத்தாகக் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், இரு நாடுகளிலும் இத்தகைய தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. பாகிஸ்தான் ஜெனரல்கள் பயங்கரவாதத்தை உள்நாட்டு, வெளிநாட்டு அரசியலில் பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால் தெற்காசியாவில் அமைதி ஏற்படாது,” என பதிவிட்டுள்ளார். இதன் பின்னணியில் டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதித்திட்டம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது

தாஹா சித்திக் தற்போது பாகிஸ்தானில் இல்லாமல், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News