33 ஆண்டுகளுக்குமுன் கடத்தப்பட்ட சிறுவனைக் குடும்பத்தோடு சேர்த்த ஓவியம்

363
Advertisement

தான் வரைந்த ஓவியத்தின்மூலம் குடும்பத்தோடு இணைந்திருக்கிறான் 33 ஆண்டுகளுக்குமுன் கடத்தப்பட்ட சிறுவன்.

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் லி ஜிங்வே என்னும் சிறுவன் நான்கு வயதில் கடத்தப்பட்டு, சொந்த ஊரான ஜாடோங்கிலிருந்து 1,600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடமத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்திலுள்ள லங்காவோவுக்கு அனுப்பப்பட்டான்.
என்றாலும், ஜிங்வேவுக்குத் தனது பெற்றோரைப் பற்றி சிந்தனை மேலோங்கிக்கொண்டே இருந்தது. அதனால் பிறந்த ஊரை நினைவுகூரும் வகையில் தினமும் ஒருமுறையாவது வீட்டின் படங்களை வரைந்து வந்துள்ளான்.

இளைராக வளர்ந்ததும், சிறுவயதில் தன் கிராமத்தில் உள்ள வீடுகளின் தோற்றங்கள், உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள், பார்த்த மரங்கள், பசுக்கள் புல் மேய்ந்த பகுதிகள், பாய்ந்தோடிய ஆறு போன்றவற்றை ஓவியமாக வரைந்து டிக்டேக்கில் வீடியோவாக வெளியிட்டார். அதில், எனது வீட்டைத் தேடிவரும் குழந்தை நான் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த வீடியோ வைரலாகி அவரது தாயாரைக் கண்டுபிடிக்கக் காவல்துறைக்கு உதவியது.
அதைத் தொடர்ந்து டிஎன்ஏ சோதனை மூலம் தாய், மகனை உறுதிப்படுத்தினர். பின்னர், ஜிங்வேயை அவரது தாயோடு சேர்த்து வைத்தனர். தன் சொந்த வீட்டுக்குத் திரும்பியபோது தந்தை சில ஆண்டுகளுக்குமுன்பு இறந்த செய்தியறிந்து தந்தையின் கல்லறைக்குச் சென்று கண்ணீர் மல்க அஞ்சலிசெலுத்தியுள்ளார்.

இதுபற்றிக் குறிப்பிட்டுள்ள ஜிங்வே, நான் இவ்வளவு சீக்கிரத்தில் எனது பெற்றோரைக் கண்டுபிடிப்பேன் என்று நினைக்கவில்லை. புத்தாண்டின் முதல் நாளில் எனது அம்மாவைப் பார்த்தபோது மீண்டும் பிறந்ததுபோல் உணர்ந்தேன் என்று பேரானந்தம் கொள்கிறார்.

தற்போது திருமணமாகிக் குடும்பத்தோடு இருக்கிறார் ஜிங்வே.

அதேசமயம், தன்னைத் தத்தெடுத்த குடும்பம், தான் ஒரு சிறந்த மனிதனாக வாழக் கற்றுக்கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

சிறுவயதில், மொட்டையடித்த பக்கத்து வீட்டுக்காரர் சிறிய பொம்மையைக் காட்டிக் கவர்ந்து சென்று அழைத்துச்சென்றதாகக் கூறியுள்ளார் ஜிங்வே.

இணையத்தின் சேவையை உணர்ந்து நெட்டிசன்கள் காலரைத் தூக்கிவிடுகின்றனர்.