Friday, December 12, 2025

ஆபரேஷன் செய்யும் ஆப்டிமஸ் ரோபோ! எலான் மஸ்க் போட்ட மாஸ்டர் பிளான்!

டெஸ்லா நிறுவனத்தின் ‘ஆப்டிமஸ்’ மனித உருவ ரோபோக்கள் எதிர்காலத்தில் மிக உயர்தர மருத்துவச் சேவைகளை வழங்கக்கூடிய அறுவை சிகிச்சை நிபுணர்களாக உருவெடுக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். தற்போதைய மருத்துவ துறையில் காணப்படும் நிபுணர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், தரமான சிகிச்சையை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர் ரான் பேரோனுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ஆப்டிமஸ் ரோபோக்களின் திறன் குறித்து மஸ்க் தனது எதிர்காலக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார். மனிதர்களால் செய்ய இயலாத அளவிற்கு நுணுக்கமான மற்றும் கடினமான அறுவை சிகிச்சைகளையும் இந்த ரோபோக்கள் மேற்கொள்ளும் திறன் பெறும் எனவும் அவர் விளக்கினார்.

மஸ்க் கூறுகையில், ‘உலகளவில் உயர்தர அறுவை சிகிச்சை நிபுணர்கள் மிகக் குறைவு. அவர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர்; ஆனால் இதே நிபுணத்துவத்தைக் கொண்ட ரோபோக்களை தொழிற்சாலைகளில் பெருமளவில் தயாரிக்க முடியும்’ என்றார். இதன் மூலம், மருத்துவ துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் நம்புகிறார்.

ஆப்டிமஸ் போன்ற ரோபோக்கள் பரவலாக தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டால், சுகாதாரச் செலவுகள் குறைவதுடன், அறுவை சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறையும் தீரும். மேம்பட்ட சிகிச்சைகளில் சமத்துவம் ஏற்பட்டு, ஒவ்வொரு நபருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்கும் சூழலை உருவாக்க முடியும் என மஸ்க் வலியுறுத்தினார்.

இதன் மூலம், எதிர்காலத்தில் மனித மருத்துவர்களோடு இணைந்து செயல்படும் ரோபோ அறுவை நிபுணர்கள் உலக சுகாதார துறையில் புரட்சியை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்தார்.

Related News

Latest News