நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு…

தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கருத்துகளை முன்வைத்தார். சட்டசபை மரபுகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை யாரும் வழிமொழியவில்லை என குறிப்பிட்டார். அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “நம்பிக்கை கோரும் தீர்மானத்தை யாரும் வழிமொழியத் தேவையில்லை” என்று விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பெயரையே முன்வைத்து மக்களை சந்தித்ததால் தான் அ.தி.மு.க. 47 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக கூறினார். மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தது அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில்தான் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சி தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சியாக இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்ந்ததாகவும் கூறினார்.

அதேவேளை, அ.தி.மு.க.வில் உள்ள கருத்து வேறுபாடுகளில் ஒரு தரப்பை மட்டும் முதலமைச்சர் ஆதரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் விமர்சித்தார். சில எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக ஆசை காட்டப்படுவதாக தகவல்கள் வருவதாகவும், குதிரை பேரம் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

“66 சதவீத மக்கள் த.வெ.க.வுக்கு வாக்களிக்கவில்லை. எனவே இந்த அரசை தொடர ஆதரவு அளிக்கவில்லை” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் சி.வி.சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டது சட்டசபையில் கவனம் ஈர்த்தது.

Related News

Latest News