தேர்தலின் போது வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யும் நிகழ்வு, கட்சியினரால் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும். மேளதாளங்கள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் வேட்பாளர்கள் ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்வார்கள்.
இந்த நிலையில், ஆன்லைனில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. அதன்படி, சுவிதா என்ற இணையத்தில் வேட்பாளர்கள் லாகின் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து மனுதாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் வேட்பாளர்கள் மனுதாக்கல் மட்டுமின்றி, தேர்தல் பிரசாரங்களுக்கான அனுமதிகள், பாதுகாப்பு கோரிக்கைகள், வரவு செலவு கணக்குகளையும் தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை, வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறும் பீகார் தேர்தலில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் ஏற்படும் தாக்கத்தை பொறுத்து, அடுத்தாண்டு தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் முழு அளவில் செயல்படுத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.