உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் காவல்துறையினருக்கு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த வீரேஷ் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியை தாக்கி, இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி அங்கிருந்து தப்பியுள்ளார்.
சிறுமி வீட்டிற்கு சென்று நடந்ததை தந்தையிடம் தெரிவித்தார். புகார் அளிக்க காவல் நிலையம் சென்றபோது, போலீசார் பாரபட்சமாக நடந்து கொண்டதுடன், FIR பதிவு செய்ய மறுத்தனர். இதனால், சிறுமியின் தந்தை நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பிறகே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என போலீசார் 2024 டிசம்பர் 30ஆம் தேதி இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனர். விசாரணை அதிகாரி நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய தவறியதாகவும், சிறுமியின் வாக்குமூலத்தை புறக்கணித்ததாகவும் சிறுமியின் தந்தை கடந்த மாதம் 27ஆம் தேதி எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் விசாரணை அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவரின் கடையில் இருந்து ஆறு சமோசாக்களை லஞ்சமாக வாங்கி, பின்னர் தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
சிறுமி கடனுக்கு சமோசா கேட்டதாகவும், மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் பொய்யான வழக்குப் பதிவு செய்ததாகவும் எஃப்.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, விசாரணை அதிகாரி தாக்கல் செய்த இறுதி அறிக்கையை நீதிமன்றம் நிராகரித்து, வழக்கை தொடர உத்தரவிட்டுள்ளது.