இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்

இந்தியாவில் மது மற்றும் புகைப்பழக்கத்தின் காரணமாக ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அறுவை சிகிச்சை மருத்துவர் செல்வி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதில் பாதிக்கப்படுவோரில் சுமார் 55 சதவீதம் பெண்கள் எனவும் அவர் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், ஆனால் நோயை சரியான நேரத்தில் கண்டறிவதில் இன்னும் பல சவால்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மேம்பட்ட பரிசோதனை வசதிகள் இல்லாததால் நோயை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை பெறுவதிலும் சிக்கல்கள் உருவாகின்றன என்று அவர் விளக்கினார்.

சமீபத்தில் 12,000 நோயாளிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், வெளியே மேற்கொள்ளப்படும் திசு பரிசோதனைகளில் 25 சதவீதம் பேருக்கு மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய நிலை இருப்பது தெரியவந்துள்ளது. அந்த மறுபரிசோதனை செய்யப்பட்டவர்களில் 62 சதவீதம் பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது என்றும், அதில் 55 சதவீதம் பேர் பெண்கள் என்றும் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணன் கூறினார். விழிப்புணர்வு குறைவால் பல பெண்கள் நோயை ஆரம்பத்திலேயே கண்டறியாமல் விடுவதால், மார்பகத்தை முழுமையாக அகற்ற வேண்டிய நிலை உருவாகிறது. ஆனால் நோயை தொடக்க நிலையில் கண்டறிந்தால் மார்பகத்தை பாதுகாத்து சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பெண்களிடையே அதிகரித்து வரும் புகையிலை மற்றும் மது பழக்கம், ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாக உண்ணுவது போன்ற காரணங்களாலும் இந்த நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று அவர் எச்சரிக்கை தெரிவித்தார்.

Related News

Latest News