போராட்டத்தை கைவிடவில்லை.. தவறான தகவலை பரப்பாதீர்கள்.. மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மறுப்பு..

271
Advertisement

டெல்லியில் மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த போராட்டக் களத்திலிருந்து வெளியேறியதாக வெளியான தகவலை சாக்ஷி மாலிக் மறுத்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளத் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தனர். அவரை உடனடியாக கைது செய்ய கோரி மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாத இறுதி முதல் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட் வரை சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர வேண்டியிருந்தது. ஆனால் வழக்குப் பதிவு செய்த பின்னரும் பிரிஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஜூன் 9ஆம் தேதி மல்யுத்த வீரர்களுடன் டெல்லி சென்று ஜந்தர் மந்திரில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதாக விவசாய சங்கத்தின் ராகேஷ் டிக்கைட் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்திய நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் ரயில்வே பணிக்கு திரும்பியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்த செய்தியை மறுத்து சாக்ஷி மாலிக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் நீதி கிடைக்கும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம். போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது. தவறான தகவலை பரப்பாதீர்கள். நீதிக்கான போராட்டத்திலிருந்து யாரும் பின்வாங்கவில்லை. பின்வாங்கவும் மாட்டோம் என சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.