Sunday, December 28, 2025

மோடி கொடுத்த அழுத்தத்தால் வேட்புமனு நிராகரிப்பு : கண்ணீருடன் ஆர்.ஜே.டி வேட்பாளர்

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஐக்கிய ஜனதாதளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், மோஹானியா சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த சுவேதா சுமன் என்பவரின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா என சுவேதா சுமன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சுவேதா சுமன், “டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தத்தின் காரணமாக என் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் தங்களுக்கு வேறு வழி இல்லை எனத் தெரிவித்தனர். பாஜக, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தான் அழுத்தம் கொடுக்கின்றனர்.

இதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சங்கீதா, அவரது சாதி சான்றிதழை காலம் தாழ்த்தி 13ஆம் தேதி தான் சமர்ப்பித்தார். ஆனால், அவரது வேட்பு மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

Related News

Latest News