‘பேச்சுவார்த்தையே கிடையாது!’ – அமெரிக்காவின் முகத்தில் கதவைச் சாத்திய ‘ஈரான்’!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமாதானம் ஏற்படுமா என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் விடுத்துள்ள ஒரு அதிரடி அறிவிப்பு, அமைதிப் பேச்சுவார்த்தையின் கதவுகளை மொத்தமாகச் சாத்தியுள்ளது.

“அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை நீடிக்கும் வரை, அவர்களுடன் எந்தவித நேரடிப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் உரையாடிய பெசெஷ்கியன், “மிரட்டல்கள், அழுத்தங்கள் மற்றும் முற்றுகைகளுக்கு மத்தியில் ஈரான் ஒருபோதும் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது” என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார். அமைதிக்குத் தடையாக இருப்பது பேச்சுவார்த்தைகள் இல்லாதது அல்ல; மாறாக, அமெரிக்கா தொடர்ந்து நடத்தி வரும் விரோதமான செயல்கள்தான் காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.

“பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமானால், முதலில் அமெரிக்கா தனது முற்றுகை போன்ற தடைகளை நீக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் நம்பிக்கை பிறக்கும்,” என்று அவர் தனது நிபந்தனையைத் தெளிவாக முன்வைத்துள்ளார். ஈரானின் இந்தத் திடீர் முரட்டுத்தனமான நிலைப்பாட்டால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். “ஈரானுடன் பேசுவதற்காக, எனது பிரதிநிதிகள் 18 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்யத் தேவையில்லை.

எல்லா சீட்டுக்கட்டுகளும் (All Cards) இப்போது எங்களிடம்தான் உள்ளன. அவர்களுக்குத் தேவைப்பட்டால் அவர்கள் எங்களை அழைக்கட்டும்,” என்று ட்ரம்ப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இதன்பேரில், அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் பாகிஸ்தான் பயணம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்தப் போரில், ஈரானின் முன்னாள் உச்சக்கட்டத் தலைவர் அயதுல்லா கமேனி உட்பட சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான நம்பிக்கையின்மை, அமைதிப் பேச்சுவார்த்தையை ஒரு முடிவில்லாத பாதையை நோக்கி இழுத்துச் செல்கிறது.

ஒருபக்கம், முற்றுகையை நீக்காமல் பேச்சுவார்த்தை இல்லை என்று ஈரான் பிடிவாதமாக நிற்கிறது. மறுபுறம், “என்னிடம் மண்டியிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை” என்று ட்ரம்ப் முழங்குகிறார். இந்த ஈகோ போரில், அடுத்து என்ன நடக்கப் போகிறது? போர்நிறுத்தம் முடிவுக்கு வந்து, மீண்டும் குண்டுமழை பொழியுமா? அல்லது, மூன்றாவது ஒரு நாடு தலையிட்டு இந்த முடிச்சை அவிழ்க்குமா? என்ற கேள்விகளோடு உலகமே மத்திய கிழக்கை பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.

Related News

Latest News