இந்தியாவில் பாதுகாப்பான முதலீடுகளுக்கான நம்பகமான வாய்ப்பாக அஞ்சல் அலுவலக ஃபிக்ஸ்ட் டெபாசிட் அதாவது FD திட்டம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் நேரடி ஆதரவு இருப்பதால், முதலீட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதோடு, நிலையான வருமானமும் கிடைக்கிறது.
2025ஆம் ஆண்டிற்கான அஞ்சல் அலுவலக FD வட்டி விகிதங்கள் 6.9% முதல் 7.5% வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் விகிதங்கள் மாறினாலும், வங்கிகளின் FD-களை விட சற்றே அதிக வருமானத்தை இது வழங்குகிறது. குறிப்பாக, 1 ஆண்டு FDக்கு சுமார் 6.9% வட்டி வழங்கப்படும் நிலையில், 2 ஆண்டுக்கு 7%, 3 ஆண்டுக்கு 7.1% வட்டி கிடைக்கிறது. அதிகபட்சமாக 5 ஆண்டு FDக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. மேலும், 5 ஆண்டு FD-க்கு வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகையும் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தைத் தொடங்க குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு போதுமானது. முதலீட்டாளர்கள் தங்கள் பணியின் முதிர்வுத் தொகையை எளிதாகக் கணக்கிட அஞ்சல் அலுவலக FD கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். கணக்கைத் தொடங்க, அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தில் அடையாள அட்டை, முகவரிச் சான்று மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். தற்போது டிஜிட்டல் வழிகளிலும் கணக்கு தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு, அஞ்சல் அலுவலக FD ஒரு நிச்சயமான முதலீட்டு வாய்ப்பாக கருதப்படுகிறது. முதலீடு செய்வதற்கு முன், அந்நேரத்தில் நடைமுறையில் உள்ள வட்டி விகிதங்கள் மற்றும் தொடர்புடைய விதிமுறைகளை நேரடியாக அஞ்சல் அலுவலகத்தில் சரிபார்த்துக்கொள்வது அவசியமாகும்.