தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. குறிப்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஒட்டுமொத்த தமிழக அரசியல் வியூகங்களையும், தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த அசுர வளர்ச்சி தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது.
திமுகவை வீழ்த்தி முதல்வர் விஜய் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார் என்று எதிர்பார்காத பாஜக மேலிடத்திற்கு, அவர் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைப்பார் என்பது ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழலில், அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்காமல் சில மாதங்களுக்கு அமைதியாக இருந்து கள நிலவரங்களைக் கவனிக்க டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது.
உண்மையில், 2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலையின் தலைமையில் பாஜக தனித்துப் போட்டியிட்டபோது 11 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், அந்தத் தனி அணி வியூகம் திமுகவிற்குச் சாதகமாக முடிந்ததால், 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அமித் ஷா முடிவு செய்திருந்தார். எனினும், தேர்தல் முடிவுகள் அமித் ஷாவின் முன்கூட்டிய அரசியல் கணக்குகளை முற்றிலும் சிதைத்துவிட்டன.
இந்தத் தேர்தலில் திமுக சந்தித்த படுதோல்விக்கு மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது, அந்தக் கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கியாக இருந்த சிறுபான்மையினர் வாக்குகள் ஒட்டுமொத்தமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் சாய்ந்ததுதான். சுமார் 80 சதவீதக் கிறித்தவர்கள் மற்றும் 60 சதவீத முஸ்லிம்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளதால், இனி திமுகவால் அந்த இடத்தை மீட்டெடுக்க முடியுமா என்ற சந்தேகம் டெல்லி பாஜக தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதாவது, தமிழக அரசியலில் இதுவரை திமுக வகித்து வந்த அந்த ‘முதன்மை இடத்தைத்’ தற்போது தமிழக வெற்றிக் கழகம் பிடித்துள்ளதாக அமித் ஷாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம், அதிமுகவும் மிகக் கடுமையான சவால்களைச் சந்தித்து வருவதால், திராவிடக் கட்சிகள் பலவீனமடைந்துள்ள இந்தச் சூழலைப் பாஜகவிற்குச் சாதகமாக மாற்ற அமித் ஷா ஒரு புதிய சாணக்கியத் திட்டத்தைத் தீட்டி வருகிறார்.
“இப்போதைக்கு அமைதி காப்போம், நடப்பதைச் சில மாதங்களுக்கு வேடிக்கை பார்ப்போம்” என்று டெல்லி தலைமை கூறியிருப்பது, ஒரு தற்காலிகப் பின்வாங்கலாகவே பார்க்கப்படுகிறது. அவசரப்பட்டு அடுத்த கட்ட நகர்வை எடுக்காமல், விஜய்யின் நிர்வாகத் திறன் மற்றும் அதிமுகவின் எதிர்கால நிலையை உன்னிப்பாகக் கவனித்துவிட்டு, அதற்கேற்பத் தமிழக பாஜகவை அடிமட்ட அளவில் இருந்து மறுசீரமைக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.
நீண்ட கால நோக்கில் தமிழகத்தில் ஒரு பலமான மாற்று சக்தியாக பாஜகவை நிலைநிறுத்த வேண்டுமானால், கட்சியில் பெரிய அளவிலான மாற்றங்கள் தேவை என்பதை அமித் ஷா உணர்ந்துள்ளார். இதற்காகத் தமிழக பாஜகவின் தலைமை முதல் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் வரை அனைவரையும் மாற்றியமைத்து, 2029 மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய வியூகம் வகுக்கப்பட உள்ளது.
திமுகவின் வாக்கு வங்கி சரிந்துள்ள நிலையில், அந்த வெற்றிடத்தைப் பாஜக பிடிக்குமா அல்லது முதல்வர் விஜய் தனது செல்வாக்கை மேலும் அதிகரிப்பாரா என்ற போட்டி இப்போது டெல்லி மற்றும் சென்னைக்கு இடையே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. மொத்தத்தில், அமித் ஷாவின் இந்த ‘பொறுத்திருந்து பார்க்கும்’ முடிவு, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான முன்னறிவிப்பாகவே கருதப்படுகிறது.
