Tuesday, December 16, 2025

இனிமே எருமை-ன்னு யாரையும் திட்ட முடியாது! 2 கோடிக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஹரியானா எருமை! என்ன ஸ்பெஷல்?

ராஜஸ்தானின் ஆரவல்லி மலைத்தொடரின் மத்தியில் அமைந்துள்ள புஷ்கர் நகரம், உலகப் புகழ்பெற்ற ஒட்டகத் திருவிழாவால் ஆண்டுதோறும் பெரும் மக்கள் திரளை ஈர்க்கிறது. இந்திய பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு அழகை வெளிப்படுத்தும் இந்த விழா, பாலைவன மணற்பரப்பில் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்கள் அணிவகுத்து வரும் காட்சியால் சுற்றுலா பயணிகளின் கவனத்தை கவர்கிறது.

இவ்வாண்டு புஷ்கர் ஒட்டகத் திருவிழா அக்டோபர் மாத இறுதியிலிருந்து நவம்பர் முதல் வாரம் வரை நடைபெறவுள்ளது. கார்த்திகை பௌர்ணமி நாளில் நிறைவடையும் இந்த திருவிழாவில், ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள், குதிரைகள், மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகள் காட்சிக்கும் விற்பனைக்கும் நிறுத்தப்படுகின்றன.

அதிகாரிகள் தெரிவித்ததன்படி, இதுவரை 4,300-க்கும் மேற்பட்ட விலங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3,000-க்கும் மேற்பட்ட குதிரைகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் இடம்பெற்றுள்ளன.

பார்வையாளர்களின் சிறப்பு கவனத்தை ஈர்த்தது, கேரளாவைச் சேர்ந்த “ஷாபாஸ்” என்ற மார்வாரி இன ஆண் குதிரை. பல தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற இதன் விலை ரூ.15 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹரியானாவைச் சேர்ந்த “அன்மால்” எனப்படும் எருமை ரூ.2 கோடி மதிப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1500 கிலோ எடையுடைய இதற்கு தினசரி ரூ.1,500 மதிப்பிலான உணவு வழங்கப்படுவதோடு, பாதாம் எண்ணெய் மசாஜ் மூலம் பராமரிப்பு செய்யப்படுகிறது.

மேலும், ஜெய்பூரைச் சேர்ந்த அபினவ் திவாரி கொண்டு வந்த 16 அங்குல உயரமுள்ள சிறிய பசு, “புஷ்கரில் மிகக் குறைந்த உயரமுள்ள பசு” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. விலங்குகளின் நலனைக் காக்க, 24 மணி நேர கால்நடை மருத்துவக் குழுக்கள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறை பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related News

Latest News