உலகம் கண்காணிக்கும் உக்ரைனின் பாதுகாப்பு நடவடிக்கையில், அமெரிக்கா புதிய படி ஒன்றை எடுத்திருக்கிறது. 172 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ராணுவ ஆதரவு ஒப்பந்தத்திற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதில், உக்ரைனின் HAWK கட்டம் III ஏவுகணை அமைப்பை பராமரிக்க தேவையான உபகரணங்கள், சேவைகள், தொழில்நுட்ப உதவி, பயிற்சி மற்றும் உதிரிப்பாகங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன.
உக்ரைனுக்கு இது சாதாரண ஒப்பந்தம் அல்ல. குறைந்த மற்றும் நடுத்தர உயரத்தில் பறக்கும் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்றவற்றை வீழ்த்தும் திறன் கொண்ட HAWK ஏவுகணை அமைப்பை செயல்படுத்தும் மிக முக்கியமான பகுதிகளை இது உறுதிப்படுத்துகிறது.
குறிப்பாக, ஐந்து டன் சரக்கு லாரிகள், விமான பாதுகாப்பு பிரிவுகளுக்கான புதுப்பிப்பு, கருவிப் பெட்டிகள், சோதனை உபகரணங்கள், MIM-23 ஏவுகணையின் உதிரி பாகங்கள் என பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இவை அனைத்தும், பழுதுபார்ப்பு மற்றும் சேமிப்பு வசதிகளுடன் கூடிய தொழில்நுட்ப ஆதரவாக வழங்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் நிறுவனங்களாக, கிரீஸ்ஸில் உள்ள சீல்மேன் கார்ப்பரேஷன்(Sielman Corporation), அமெரிக்காவில் உள்ள RTX கார்ப்பரேஷன் மற்றும் அலபாமாவில் அமைந்துள்ள PROJECT XYZ ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசின் சார்பில் ஐந்து பேர் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் 15 பணியாளர்கள் குறுகிய காலத்திற்கு உக்ரைனில் பணியாற்ற அனுப்பப்பட இருக்கிறார்கள்.இந்த ஒப்பந்தத்தில் தற்போது எந்தவொரு ஆஃப்செட் ஏற்பாடுகளும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் அவை திட்டமிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்குப் பிரதியாக, உக்ரைனின் Bradley சண்டை வாகனங்களுக்கு பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு சேவைகளை வழங்க 150 மில்லியன் டாலர் மதிப்பிலான இன்னொரு ஒப்பந்தத்திற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த முயற்சி, உக்ரைனின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கவும், தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் வரக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு சீரான பதிலளிப்பை வழங்கவும் அமைந்துள்ளது. முக்கியமாக, பிராந்தியத்தில் நிலவும் சமநிலையை மாற்றாது, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் அமையப் போவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.