பெட்ரோல் விலையேற்றத்தை சமாளிக்க புதிய டூ வீலர்

499
two-wheeler
Advertisement

பெட்ரோல் விலையேற்றத்தை சமாளிக்க 6 பேர் ஒன்றாக அமர்ந்துசெல்லும் புதிய டூ வீலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த டூ வீலர் பற்றிய வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் ஏணி ஒன்றின் ஒருமுனையைக் கியருடன் கூடிய ஒரு மோட்டார் சைக்கிளுடனும், மற்றொரு முனையை இரண்டு சக்கரங்களுடனும் இணைத்துக்கட்டி, அதில் 6 பேர் அமர்ந்து தங்கள் சுமைகளுடன் பயணிக்கின்றனர்.

பெட்ரோல் விலை இப்படியே தொடர்ந்து உயர்ந்துகொண்டே போனால் நிலைமை என்னவாகும் என்பதை சித்தரிக்கும் விதமாக இந்த வாகனம் அமைந்துள்ளது. வேடிக்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டூ வீலரை எல்லா இடங்களிலும் பாதுகாப்பாக ஓட்டிச்செல்வது கடினம். எனினும், இந்தியர்களின் இத்தகைய திறமையை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தியுள்ளதென அக்கறையுடனும் கிண்டலாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நவீன யுகத்தில் வாகனப் போக்குவரத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால், பெட்ரோல் விலையோ விண்ணைத் தொடுமளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், பெட்ரோல் நிரப்பி வாகனத்தை இயக்க முடியாமலும், வாகனப் போக்குவரத்தைத் தவிர்க்கமுடியாமலும் பலரும் தவித்துவரும் நிலையில் இந்தப் புதுவகை டூ வீலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வித்தியாசமாக சிந்திப்பதிலும், புதுமையாகத் தயாரிப்பதிலும் இந்தியர்கள் தனித்துவம் மிக்கவர்கள் என்பதை இந்த வாகனம் உணர்த்துகிறது.