ஏப்ரல் 4ம் தேதி நடைபெற்ற மும்பை-லக்னோ போட்டியில், மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டுமொரு தோல்வியைத் தழுவினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில், விரைவில் ஒரு கேப்டன் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டாஸ் வென்ற ஹர்திக் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார். ஆனால் லக்னோ அணி, மும்பையின் பந்துவீச்சை சிதைத்து விட்டது. ஹர்திக் 5 விக்கெட்களை வீழ்த்தியும் கூட, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 203 ரன்கள் குவித்து விட்டது.
மார்ஷ், மார்க்ரம் இருவருமே அரைசதம் அடித்து, லக்னோவை வெற்றிப்பாதைக்கு திருப்பியுள்ளனர். இந்தநிலையில் சேஸிங்கின்போது மும்பை அணியினர் செய்த ஒரு விஷயம், பூமராங் போல அவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.
அந்த அணியின் இளம்வீரர் திலக் வர்மா 23 ரன்னில் இருந்தபோது, அவரை Retired Out முறையில் வெளியேற்றி விட்டார்கள். ஒரு வீரர் காயம் அடைந்தாலோ அல்லது பந்தை வீணடித்து விடுவோம், என்று அச்சம் அடைந்தாலோ இந்த முறையில் வெளியேறலாம்.
ஆனால் திலக் வர்மாவிற்கு பதிலாக அவர்கள் இறக்கிய நபரைப் பார்த்து, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட சொந்த அணியினரே அதிர்ச்சி அடைந்தனர். கட்டக்கடைசியில் அவர்கள் களமிறக்கியது மிட்செல் சாண்ட்னரை. அவர் உள்ளே வந்து 2 பந்துகளை சந்தித்து, 2 ரன்னை மட்டுமே எடுத்தார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ”இதுக்கு பருத்திமூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம். பேசாம விட்டிருந்தாலே மும்பை ஜெயிச்சிருக்கும்,” என்று விதவிதமாக கிண்டலடித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனுமான் விஹாரி, ”கடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை சேஸிங் செய்தபோது, ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அப்போது அவர் ஏன் Retired Out ஆகி வெளியேறவில்லை?”, என்று நெத்தியடியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இதேபோல மற்றொரு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ”சாண்ட்னருக்காக திலக் வர்மாவை Retired Out ஆக்கியது என்னை பொறுத்தவரை தவறு.
திலக் வர்மாவை விட மிட்செல் சாண்ட்னர் சிறந்த பேட்ஸ்மேனா? Pollard போன்ற அதிரடி வீரர் ஒருவருக்காக இப்படி செய்திருந்தால், அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது, ‘ என்று தன்னுடைய பங்குக்கு, ஹர்திக்கை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
எது எப்படியோ ஹர்திக்கின் நிலைமை தற்போது சேற்றிலும், சோற்றிலும் சேர்த்து அடிவாங்கியது போல ஆகிவிட்டது.