Friday, June 27, 2025

போரை ‘நேரில்’ பார்க்க முன்பதிவு ஆடல், பாடலுடன் செம ‘Vibe’ ‘மனுஷங்களே இல்ல’ வெளுக்கும் நெட்டிசன்கள் 

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்தாலும்கூட, அதுதொடர்பான செய்திகள் இன்னும் முடிவடையவில்லை. இணையம், சமூக வலைதளங்கள் என்று எங்கு பார்த்தாலும் போர் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் தான் குவிந்து கிடக்கின்றன.

இந்தநிலையில் ஈரான் – இஸ்ரேல் இடையிலான ஏவுகணை தாக்குதலை நேரில் கண்டுகளிக்க, உணவகம் ஒன்று முன்பதிவு அறிவித்த விஷயம் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. அதில் ஜோர்டான் நாட்டின் Al Salt நகரத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்று ஈரான் – இஸ்ரேல் ஏவுகணை மோதலை முன்பதிவு செய்து நேரில் ரசியுங்கள் என்று, வாடிக்கையாளர்களிடம் விளம்பரம் செய்துள்ளது.

இதையடுத்து அந்த உணவகத்தின் திறந்தவெளி மேற்கூரையில் அமர்ந்து, ஈரான் – இஸ்ரேல் போரினை ஏராளமானோர் அமர்ந்து ரசித்திருக்கின்றனர். அத்துடன் போரினை புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பதற்காக ஆர்டர் செய்த உணவினை மறந்துவிட்டு, அவர்கள் ஓடும் காட்சியும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொடுமை என்னவென்றால் பாட்டு போட்டு இந்த போர் காட்சிகளை, லெபனான் நாட்டினர் கொண்டாடி Vibe செய்தது தான். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, இதைப்பார்த்த நெட்டிசன்கள், ”போர் ஏற்படுத்தும் வன்முறை குறித்து தெரிந்தும், சக மனிதர்கள் மடிவதை நேரில் கண்டு ரசிக்கும் அளவுக்கு மக்களின் மனம் மாறிவிட்டதா? மனிதகுலம் எதை நோக்கி சென்று கொண்டுள்ளது? ஒரு போரினை நேரில் முன்பதிவு செய்து, உணவு அருந்திக்கொண்டே பார்க்கும் நிலையில் தான் மனிதநேயம் உள்ளதா?

உயிரிழப்பை ரசிக்கும் ஓர் காட்சி! கடவுள் நம்மை மன்னிக்கட்டும். இது மனித குலமே வெட்கப்பட வேண்டிய தருணம். மனிதர்கள் மற்றொருவரின் மரணத்தை ரசிக்கிறார்கள். மனிதநேயம் நாளுக்குநாள் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மனிதநேயத்தை மறுபடியும் தேட வேண்டிய நேரம் இது,” இவ்வாறு விதவிதமாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news