நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பேருந்துகள் ஆட்டோக்கள் ஓடுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாடு முழுவதும் நாளை இந்த பொது வேலைநிறுத்தம் நடைபெறவிருக்கிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு திமுகவின் தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., உட்பட 13 தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுகவின் தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பேருந்துகள் நாளை இயக்கப்படாது எனத் தெரிகிறது.
அதே நேரத்தில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்பது கவனிக்கப்படத்தக்கது. எனவே, அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வருவார்கள் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படலாம் எனக் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் ஆட்டோ தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு.வில் அங்கம் வகிப்பதால் அநேகமாக ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பில்லை. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும். நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில் வங்கித் துறையும் காப்பீட்டு துறையும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.