Tuesday, September 30, 2025

பிப்ரவரிக்குள் நிலவைச் சுற்றி மனிதர்களை அனுப்பத் தயாராகும் நாசா? உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் ஆர்டெமிஸ் II!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் விண்வெளி வீரர்களை நிலவைச் சுற்றி பத்து நாள் பயணத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டிருந்த பணியை, முன்கூட்டியே நிறைவேற்றும் முயற்சியில் உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக எந்த நாடும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பாத நிலையில், நாசா நான்கு விண்வெளி வீரர்களை அனுப்பி பல்வேறு அமைப்புகளைச் சோதிக்கிறது. இது ஆர்டெமிஸ் திட்டத்தின் இரண்டாவது பணி. திட்டத்தின் முக்கிய இலக்கு, எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி, அங்கே நீண்டகால இருப்பை ஏற்படுத்துவதே.

நாசாவின் பொறுப்பு துணை நிர்வாகி லாகீஷா ஹாக்கின்ஸ், “மனிதர்களின் விண்வெளி ஆய்வில் இது ஒரு வரலாற்று தருணமாக இருக்கும். பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு முன்னரே ஏவுதல் சாத்தியம், ஆனால் பாதுகாப்புதான் எங்கள் முதன்மை” என்று தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஏவுதல் அமைப்பு ஏறக்குறைய தயாராக உள்ளது. இதனுடன் இணைக்கப்படும் ஓரியன் காப்ஸ்யூல் இறுதி சோதனைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. ஆர்டெமிஸ் I பணி 2022 நவம்பரில் 25 நாள் மனிதர் இல்லாத சோதனைப்பயணமாக நடைபெற்றது. நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாக இறங்கிய அந்தப் பணி வெற்றி பெற்றாலும், வெப்பக் கவசத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளன.

ஆர்டெமிஸ் II-இல் நாசா வீரர்கள் ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி வீரர் ஜெரெமி ஹேன்சன் பங்கேற்கின்றனர். இவர்கள் நிலவில் தரையிறங்கப் போவதில்லை. இருப்பினும், 1972-ஆம் ஆண்டு அப்போலோ 17க்குப் பிறகு குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் புறப்படும் முதல் மனிதர்கள் இவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News