Thursday, May 8, 2025

முத்தான 3வது ‘வெற்றியால்’ மேலும் ஒரு ‘மோசமான’ சாதனை

மே 7ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நடப்பு சாம்பியனை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மீண்டும் CSK பார்முக்குத் திரும்பியுள்ளது.

கடந்த போட்டியில் பவுலர்களை சிதறடித்த ஆயுஷ் மாத்ரே, மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற டெவன் கான்வே இருவரும் ‘டக் அவுட்’ ஆகி ரசிகர்கள் நெஞ்சில் இடியை இறக்கினர். என்றாலும் அணியில் புதிதாக இணைந்த உர்வில் படேல், 11 பந்தில் 31 ரன்கள் அடித்து வாணவேடிக்கை காட்டினார்.

இதேபோல கடந்த போட்டியில் அநியாயமாக டக் அவுட்டான டெவால்ட் பிரேவிஸ், அரைசதம் அடித்து CSKவை  கரைசேர்க்க உதவினார். கடைசி நேரத்தில் துபேவின் 45 ரன்கள், தோனியின் டெத் ஓவர் சிக்ஸ், அன்ஷூல் கம்போஜின் கடைசி பவுண்டரி ஆகியவை, சென்னையின் வெற்றியை உறுதி செய்தன.

இந்தநிலையில் KKRக்கு எதிரான வெற்றியின் மூலம் CSK நடப்பு தொடரில், மேலும் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது. அதாவது IPL ஆரம்பித்த மார்ச் மாதத்தில் முதல் வெற்றியையும், ஏப்ரலில் 2வது வெற்றியையும், மே மாதத்தில் 3வது வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள், ” இந்த வருஷம் நமக்கு நேரம் சரியில்ல போல. எந்த பக்கம் போனாலும் அடி வாங்குறோம்,” என சமூக வலைதளங்களில், விதவிதமாக புலம்பி வருகின்றனர். சென்னை அடுத்ததாக ராஜஸ்தான், குஜராத் அணிகளை எதிர்கொள்கிறது.

இந்த 2 போட்டிகளிலும் வென்றால் பாயிண்ட் டேபிளில் கொஞ்சம் மேலே போகலாம் என்பதால், சென்னை முழுவேகத்தில் இறங்கி அடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Latest news