திருநின்றவூர் பெரிய காலனி பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவர், விசிக திருநின்றவூர் நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கோமதி, 26வது வார்டு விசிக கவுன்சிலராகவும், திருநின்றவூர் நகராட்சி வரி விதிப்பு சேர்மானாக இருந்து வந்துள்ளார்.
இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், வேறு ஒரு நபருடன் கோமதி திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடுகுத்தகை ஜெயராம் நகர் பகுதியில் சம்பந்தப்பட்ட நபரிடம் கோமதி பேசி கொண்டு இருந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு சென்ற ஸ்டீபன் ராஜ், கோமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்த ஸ்டீபனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.