செங்கல்பட்டு மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் தற்போது பெருங்குளத்தூர் முதல் மகேந்திரா சிட்டி வரை எட்டு வழி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
சிங்கப்பெருமாள் கோவில் திருத்தேரி சந்திப்பில் சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருத்தேரி சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் 6 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி சிக்னல் அமைக்கப்பட்டது.
சிக்னல் அமைக்கப்பட்டு இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் சிக்னல் அமைத்தும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் தொடர்கதையாகியுள்ளது.