ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த நோஸ் ரிங் தற்பொழுது கிடைத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நாம் எப்போதோ தொலைத்த முக்கியமான பொருட்கள் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நமக்கு கிடைக்கும். அந்நேரத்தில் மகிழ்ச்சிக்கடலிலே மூழ்கிவிடுவோம். அப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் அண்மையில் நிகழ்ந்துள்ளது. தொலைத்த பொருள் கிடைத்ததால் அவர் மகிழ்ச்சியடையவில்லை. மாறாக அதிர்ச்சியடைந்துள்ளார்.ஏன் தெரியுமா?
இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த 35-வயதான ஜோ லிகின்ஸ் என்ற அந்த நபர் கூறுகையில், ஒருநாள் தூக்கத்தில் எனது நோஸ் ரிங்கை காணவில்லை. எனது படுக்கை முழுவதும் தேடினேன். அது கிடைக்கவில்லை. சிறிது நேரம் கழித்து தேடுவதை விட்டுவிட்டேன். சில ஆண்டுகள் கழிந்த நிலையில் திடீரென்று இரவு நேரத்தில் எனக்கு கடுமையான இருமல் ஏற்பட்டது. தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தேன். எனது முதுகுப்பகுதியில் கடுமையான வலியை உணரத்தொடங்கினேன். மூச்சுக்குழாயில் ஏதோ அடைப்பு ஏற்பட்டதுபோல உணர்ந்தேன். உடல்நிலை சரியில்லை என்று கருதியதால் மருத்துவரிடம் சென்றேன். அங்கு எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்ததில் 0.6 இன்ச் அளவு கொண்ட நோஸ் ரிங் நுரையீரலின் இடது மேல்பகுதியில் இருந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். அதன்பிறகு அறுவைசிகிச்சை செய்து அந்த நோஸ் ரிங் அகற்றப்பட்டு விட்டது.