Thursday, May 8, 2025

நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தானை நோக்கி பறந்த ஏவுகணைகள்! “ஆப்பரேஷன் சிந்தூர்” நடத்தப்பட்ட பின்னணி!

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் உச்சத்தில் இருந்த நிலையில் இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா தெரிவித்திருந்தது.

ஆனால் யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அதாவது நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதில் மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த தாக்குதலில் இந்தியாவின் முப்படைகளும் களம் இறங்கியுள்ளன. ஆனால் பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று இந்திய ராணுவத்தால் கூறப்பட்டிருப்பது கவனம் பெறுகிறது.

Precision strike என்று அழைக்கப்படும் இதில் தீவிரவாத கேம்ப்கள் மற்றும் ராணுவ கேம்ப்கள் குறிவைக்கப்பட்டு அதன்பின் அவை டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு சரியாக குறிவைக்கப்பட்டுள்ளனவா என்று உறுதி செய்யப்படும். உளவு பணிகள் முடிந்த பிறகு எங்கிருந்து தாக்குதல் நடத்துவது என்று தீர்மானிக்கப்படும். விமான தாக்குதல் என்றால் எப்படி வான்வழிக்குள் நுழைவது, தரைவழி தாக்குதல் என்றால் அது எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிடப்படும். “ஆபரேஷன் சிந்தூர்”-ரில் இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் உறுதி செய்யப்பட்ட பிறகு, கடைசியாக பிரதமரின் ஒப்புதல் பெறப்பட்ட பின் தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. தாக்குதல் தினமான இன்று 3 முதல் 4 மணி நேரத்துக்கு முன்னர் தான் வீரர்களுக்கே தகவல் சொல்லப்பட்டதாக தெரிகிறது. ஏனெனில் தாக்குதல் திட்டம் கசிவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Latest news