புறாக்களுக்கு கோடிக்கணக்கான சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மனிதர்கள் பெயரில் கோடிக்கணக்கான சொத்துகள் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், புறாக்களின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துகளும் வங்கிக் கணக்கில் பல லட்ச ரூபாயும் இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம், நாகௌர் மாவட்டத்தில் உள்ள ஜாஸ்நகர் கிராமத்தில் உள்ள புறாக்கள் தங்கள் பெயரில் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை வைத்துள்ளன.
இந்தப் புறாக்களுக்கு வங்கிக் கணக்குகளும் உள்ளன. அவற்றின் வங்கிக் கணக்குகளில் 27 கடைகள், 30 லட்சம் ரொக்கப் பணம், 78.75 ஏக்கர் நிலமும் உள்ளன. இதில் சுமார் ஆறரை ஏக்கர் நிலத்தில் 470 பசுக்கள் கொண்ட கோசாலையும் உள்ளது.
இவ்வளவு சொத்துகள் புறாக்களுக்கு எப்படி வந்தன?
சுமார் 40 ஆண்டுகளுக்குமுன்பு சஜ்ஜ்ன் ராஜ் ஜெயின், பிரபு சின் ராஜ்புரோஹித் ஆகிய தொழிலதிபர்கள் தங்களின் குருநாதரின் அறிவுரையை ஏற்று கபுவான் என்னும் அறக்கட்டளையை நிறுவினர். இந்த அறக்கட்டளையின்மூலம் 27 கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டனர். அதன்மூலம் மாதம் 80 ஆயிரம் ரூபாய் வாடகைப் பணம் கிடைக்கிறது.
அந்த வருவாயில் தினமும் 3 மூட்டை தானியங்களை இந்தப் புறாக்களுக்கு அளித்து வருகின்றனர். மீதமுள்ள பணத்தை வங்கியில் சேமித்து வருகின்றனர். தற்போது இந்தத் தொகை 30 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது.
புறாக்களுக்கு கோடிக்கணக்கான சொத்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.