கர்நாடக மாநிலத்தில் மகப்பேறு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், உயர்மட்ட குழு விசாரணைக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 364 மகப்பேறு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. நடப்பாண்டில் நவம்பர் மாதம் வரை மட்டும் 327 மகப்பேறு மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 40 நாட்களில் பெல்லாரியில் உள்ள அரசு மருத்துவமனையில் மட்டும் 6 பெண்கள் உயிரிழந்தனர்.
இதற்கு கர்ப்பிணி நோயாளிகளுக்கு நரம்புகளில் தரமற்ற மருந்து செலுத்தப்பட்டதால் மாரடைப்பு, சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரி சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவடி நாராயணசாமி, லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீலிடம் புகார் அளித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இதுகுறித்து முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில், மகப்பேறு மரணங்கள் குறித்து விசாரிக்க திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் கனகவல்லி தலைமையில் 4 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த குழுவின் அறிக்கையை 3 மாதங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு நரம்புகளில் செலுத்தப்படும் மருந்தை விநியோகம் செய்த மேற்குவங்க மருந்து நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பெல்லாரியில் உயிரிழந்த 6 பெண்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.