Sunday, February 1, 2026

வைகை ஆற்றில் குளிக்க சென்ற நபர்.. 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே, பூசாரிபட்டியை சேர்ந்தவர் போஸ் என்பவரது மகன் ராஜ்குமார் (32) கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிறது.

இந்நிலையில், ராஜ்குமார் உட்பட இவரது நண்பர்கள் நான்கு பேர், ஞாயிற்றுக்கிழமை வத்தலக்குண்டு அடுத்த, கூட்டாத்து அய்யம்பாளையம் என்ற இடத்தில் செல்லும் வைகை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, வைகை ஆற்று தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை, வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ராஜகுமாரின் உறவினர்கள் விருவீடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, சம்பவம் நடைபெற்ற இடம் வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு உட்பட்டது எனக்கூறி, புகார் வாங்க மறுத்துள்ளனர்.

பின்னர், வத்தலகுண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்த போது, சம்பவம் நடைபெற்ற இடம், விருவீடு காவல் நிலையத்திற்கு உட்பட்டது என, வத்தலகுண்டு காவல் துறையினர் புகார் வாங்க மறுத்துள்ளதாக கூறி, இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யாததால், ராஜகுமாரை சேரும் பணியில் மந்தம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த, உறவினர்கள், நேற்று வத்தலகுண்டு – விருவீடு சாலை செக்காபட்டி என்ற இடத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, விருவீடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று மாலை 4 மணிக்கு, வைகை ஆற்றில் வந்து ஓடிருந்த தண்ணீரை, வைகை அணையில் நிறுத்திவிட்டு தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று காலை வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட ராஜகுமாரை, மூன்று நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்டனர்.

அவரது உடலை கைப்பற்றிய விருவீடு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News