ஆந்திரப் பிரதேசம் மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், துவாரபுடி கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான சூரிய பிரகாஷ் உள்ளூரில் துணி வியாபாரம் செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா, கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டல வருவாய் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தார். இருவரும் பள்ளிக் காலத்திலேயே ஒன்றாகப் படித்து காதலித்தனர்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு சந்தியாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதை அறிந்த சந்தியாவின் சகோதரர்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.
திருமணத்திற்குப் பிறகு, சந்தியாவை அழைத்துக் கொண்டு சூரிய பிரகாஷ் தனது வீட்டிற்கு சென்றார். இதைத் தொடர்ந்து, சந்தியாவின் சகோதரர்கள் சந்திரபால் மற்றும் கிரிபாபு நள்ளிரவில் சூரிய பிரகாஷின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கினர். பின்னர் இருவரும் சேர்ந்து பாறாங்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் அவரது தலை கடுமையாக நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்திரபால் மற்றும் கிரிபாபுவை கைது செய்தனர். காதல் திருமணம் செய்த துணி வியாபாரி ஆணவக் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
