Friday, January 10, 2025

நண்டு சாப்பிடும் போட்டியில் வென்ற 55 வயது மனிதர்

நண்டு சாப்பிடும் போட்டியில் 55 வயது மனிதர் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாகத் தட்டிச்சென்று அசத்தியுள்ளார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபுளோரிடா கீஸ் தீவில் அக்டோபர் 15 ஆம் தேதிமுதல் மே 1 ஆம் தேதிவரை நண்டுகளை வலைவீசிப் பிடித்துக்கொள்ள அந்நாட்டு அரசு சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளது.

இதையொட்டி, அந்த சமயத்தில் மீன் விற்பனையாளர்களால் கல்நண்டு சாப்பிடும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 10 ஆவது நண்டு சாப்பிடும் போட்டி அங்குள்ள மீன் சந்தையில் அக்டோபர் 23 ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் 25 நண்டுகளும் அவற்றைத் துண்டுதுண்டாக நறுக்குவதற்காகக் கத்தி ஒன்றும், சாப்பிடுவதற்காக சிறிய கரண்டி ஒன்றும் தரப்பட்டது.

இதில் 55 வயதான ஜுவான் மல்லான் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார். அவர் 14 நிமிடம், 29 விநாடிகளில் 25 நண்டுகளை சாப்பிட்டு ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார்.

ஜுவான் தொடர்ந்து ஐந்தாவது முறையாக நண்டு உண்ணும் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால், 2017 ஆம் ஆண்டில் 12 நிமிடங்கள், 54 விநாடிகளில் 25 நண்டுகளை சாப்பிட்டு முடித்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

ஃபுளோரிடா மாகாணத்தில் ஆண்டுக்கு 2 மில்லியன் பவுண்ட் அளவுக்கு கல்நண்டுகள் வலைவீசி பிடிக்கப்படுகின்றன. இங்குள்ள கடலில் வளரும் கல்நண்டுகள் சுவைமிக்கதாகவும், உலகப் புகழ்பெற்றதாகவும் உள்ளன.

Latest news