ஸ்ரீபெரும்புதூர் அருகே, 17 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்ய முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியைச்சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சகா, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியை கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனால், சிறுமியின் பெற்றோருக்கும் சகாவுக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆவேசமடைந்த சகா, சிறுமியின் தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றார். சிறுமியின் தாயை காலால் எட்டி உதைத்து அராஜகம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார், சரித்திர பதிவேடு குற்றவாளி சகாவை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.