“நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள்”, ப்ளூ சட்டையை வெளுத்து வாங்கிய பிரபலம்!

484
Advertisement

அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை படம் குறித்து யூட்யூப் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

அவருடைய விமர்சனம் குறித்து சார்பட்டா நடிகர் ஜான் கோகைன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அன்புள்ள புளூ சட்டை மாறன்‌ அவர்களுக்கு ‘நீங்கள்‌ ஒரு பெரிய திரை விமர்சகர்.‌ நான்‌ ஒரு சாதாரண நடிகன்.‌

தமிழ்‌ சினிமாவில்‌ சமீபத்தில்‌ வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில்‌ ஒரு சிறிய கதாபாத்திரத்தில்‌ நடித்தவன்‌.

எனக்கு உங்களிடம்‌ நீங்கள்‌ விமர்சனம்‌ செய்வது குறித்து ஒரு கோரிக்கைவைக்க வேண்டியுள்ளது.

சினிமா இருந்தால்தான்‌ நீங்களும்‌ இருக்கிறீர்கள்.‌ சினிமா என்றாலே விமர்சனமும்‌ சேர்ந்ததுதான்‌.

விமர்சனம்‌ சினிமாவை வளர வைப்பது.

அதனாலேயே சினிமா விமர்சகன்‌ மதிக்கப்படுகிறான்.‌

குறைகளைச்‌ சுட்டிக்காட்டுவது எந்த அளவு தேவையோ அதே அளவு பிறரை மரியாதையாகப்‌ பேசுவதும்‌ தேவை.

சினிமாவில்‌ உழைப்பவர்கள்‌ பலரும்‌ தங்கள்‌ ஈடுபாட்டை அர்ப்பணிப்பைக்‌ கொடுத்து உழைப்பவர்கள்.‌

பெரிய பெரிய இயக்குனர்கள்,. நடிகர்கள்‌, சூப்பர்‌ ஸ்டார்கள்‌ பணியாற்றுகிறார்கள்.‌

அவர்கள்‌ தங்களை இந்த அடையாளங்களில்‌ நிலை நிறுத்த எத்தனை போராடியிருப்பார்கள்‌ என்று உங்களுக்குத்‌ தெரியும்‌.

ஒரு நடிகர்‌ சூப்பர்‌ ஸ்டார்‌ ஆவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு அந்த இடத்திற்கு வந்திருப்பார்‌ என்பது உங்களுக்கே தெரியும்.‌

முதலில்‌ நடிகராகத்‌ தன்னை மக்கள்‌ முன்‌ நிரூபித்த பிறகே அவர்கள்‌ சூப்பர்‌ ஸ்டார்‌ ஆகிறார்கள்‌.

அவர்களைபற்றி விமர்சனம்‌ செய்யும்போதாவது நாகரீகமாக விமர்சனம்‌ செய்யுங்கள்‌ என்பதே என்‌ கோரிக்கை.

நீங்களும்‌ ஒரு படம்‌ இயக்கி இருக்கிறீர்கள்.‌

அதன்‌ வலி, வேதனை என்னவென்று உங்களுக்கும்‌ புரியும்‌.

எந்தப்‌ படைப்பாளியுமே தன்‌ படைப்பு வெற்றி பெறவேண்டும்‌ என்று நினைத்தே படைப்பார்கள்.‌

இந்தக்‌ கொரோனா அலையில்‌ படப்பிடிப்பு நடத்தி திரைக்குக்‌ கொண்டுவருவது எவ்வளவு சிரமம்‌ என்பதை அறிந்தவர்‌ நீங்கள்.‌

அது மக்களைச்‌ சென்று சேருவது எளிதானது இல்லை. சினிமா எதிர்பார்ப்பதுபோல நடப்பதில்லை.

கதைகள்‌ சில நேரம்‌ பிடிக்கும்‌, பிடிக்காமல்‌ போகும்.‌ அப்படித்தான்‌ சினிமா.

நீங்கள்‌ விமர்சனம்‌ செய்யுங்கள்,‌ தொழில்‌ நுட்பங்களை முன்னிறுத்தி விமர்சனம்‌ செய்யுங்கள்.‌ தமிழ்‌ சினிமாவைப்‌ புரிந்து விமர்சனம்‌ செய்யுங்கள்.‌

ஆனால்‌ யாரையும்‌ தனிப்பட்ட முறையில்‌ கேவலமாகப்‌ பேசுவதைத்‌ தவிர்த்து மரியாதையுடன்‌ விமர்சியுங்கள்‌.

இதுவரை நீங்கள்‌ மோசமாக, கேவலமாகப்‌ பேசிய விமர்சனங்கள்தான்‌ அதிகம்‌ இருக்கின்றன.

அது ஒன்றும்‌ பெரிய விஷயமில்லை.

யார்‌ வேண்டுமானாலும்‌ பேசி விடலாம்.‌ திறமையாகப்‌ பேசுவதுதான்‌ கடினம்.‌ அப்படி நீங்கள்‌ மட்டமான சொற்களால்‌ விமர்சிப்பது, மட்டமான சினிமா என்று சொல்லாமல்‌ விமர்சனத்தையே மட்டமானது என்று ஆக்கிவிடும்.‌

உங்கள்‌ பின்னால்‌ வரும்‌ விமர்சகர்களுக்கும்‌ மரியாதையை மக்களிடையே குறைத்துவிடும்.‌

தமிழில்‌ நல்ல சொற்கள்‌ பல லட்சம்‌ இருக்கின்றன.

அவற்றைக்‌ கொண்டு நல்ல, மரியாதையான சொற்களால்‌ நாகரீக விமர்சனம்‌ செய்யுங்கள்.‌

பிறரை உங்கள்‌ பக்கம்‌ திருப்புவதற்காக, ஈர்ப்பதற்காக இல்லாமல்‌ எல்லோருக்கும்‌ வெற்றியைத்‌ தரும்படி விமர்சியுங்கள்‌.

இங்கே சினிமாவை நம்பி, சினிமாவில்‌ நிற்க வேண்டும்‌ என்று என்னைப்போன்று பலர்‌ இருக்கிறார்கள்.‌

அவர்களும்‌ வளர வேண்டும்.‌

சினிமா இருந்தால்தான்‌ இது எல்லாமே. அதனால்‌ அடுத்து நீங்கள்‌ விமர்சனம்‌ செய்யும்போது ஆக்கப்பூர்வமாக விமர்சனம்‌ செய்வது நல்லது.

உங்களால்‌ பலரும்‌ வாழ வேண்டும்‌. நீங்களும்‌ நன்றாக இருக்க வேண்டும்.‌

சினிமாவில்‌ எத்தனை துறைகள்‌ இருக்கின்றன? அதில்‌ எத்தனை பேர்‌ பணிபுரிகிறார்கள்‌? எத்தனை குடும்பங்கள்‌ வாழ்கின்றன? பல பேர்‌ சாதிக்க நினைத்து வந்து பாதியில்‌ போகிறார்கள்.‌

அதிலும்‌ மீண்டு வருபவர்கள்தான்‌ மக்கள்‌ முன்‌ பெயருடன்‌ நிற்கிறார்கள்‌!

அதையெல்லாம்‌ நீங்கள்‌ நினைக்க வேண்டும்.‌

தங்களின்‌ விமர்சனங்கள்‌ படைப்பாளிக்கு ஊக்கமாக இருக்கவேண்டுமே தவிர அவர்களைப்‌ புண்படுத்தும்‌ விதமாகவோ, திரைப்படத்திற்கு வரும்‌ ரசிகர்களைத்‌ தடுக்கும்‌ விதமாகவோ இருக்கக்கூடாது.

நீங்கள்‌ இதைப்‌ புரிந்து நடப்பீர்கள்‌ என்று நம்புகிறேன்.‌

இது சினிமாவில்‌ இருக்கும்‌ ஒரு சிறிய நடிகனாகிய என்‌ கோரிக்கை.

நான்‌ அஜித்‌ சாரின்‌ பெரிய ரசிகன்‌.

அவர்‌ ஸ்டைலிலேயே இறுதியாக ஒன்று நீங்க என்ன வேணா பண்ணுங்க. உங்களுக்குப்‌ புடிச்சத பண்ணுங்க.

ஆனா அடுத்தவனை மிதிச்சு முன்னேறணும்னு நினைக்காதீங்க’ வாழு! வாழவிடு’ என்று குறிப்பிட்டுள்ளார்.