மக்கானா என்பது தாமரை விதைகளை குறிக்கும். இவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாரம்பரிய இந்திய சிற்றுண்டி பிரபலமடைந்து வருகிறது. அண்மைக்காலங்களில் அதிக வரவேற்பைப் பெறும் இந்த மக்கானா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மக்கானாவில் உள்ள ஃப்ளாவனாய்ட்கள், உடலின் வீக்கத்தை குறைக்கின்றன. மேலும், சருமத்தின் பிரகாசத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. தாவர வகையை சேர்ந்த புரதச்சத்துகள் தசை வளர்ச்சியையும், ஆற்றலையும் வழங்குவதற்கும் உதவுகின்றன.
குறைந்த கலோரிகள் கொண்ட மக்கானா, உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாகும். அதேசமயம், இதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை சீராக வைத்திருக்கிறது. மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
மக்கானா கிளைசீமிக் குறியீட்டில் இடம்பிடித்துள்ளதால், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக பார்க்கப்படுகிறது. குளூட்டன் இல்லாத உணவாக இருப்பதால், குளூட்டன் ஒவ்வாமை இருப்பவர்களும் இதை சுலபமாகச் சாப்பிட முடிகிறது.
மேலும், மக்கானாவில் எண்ணெய் சத்து குறைவாகவும், மெக்னீசியம் அதிகமாகவும் உள்ளது. இதனால், ரத்த அழுத்தம் சமநிலையில் இருக்கும். இதயம் ஆரோக்கியமாக செயல்படவும், இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. இது மட்டுமல்லாமல், மக்கானாவில் உள்ள தயமின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மூளை செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கின்றன.
இதனால், பாரம்பரிய சிற்றுண்டியாக தயாரிக்கபப்டும் மக்கானா, இன்றைய தலைமுறையினரின் ஆரோக்கிய உணவுப் பட்டியலில் முக்கிய இடம் பிடித்து வருகிறது.
இருப்பினும் மக்கனா உட்கொள்ளுவதற்கு முன் உங்களுக்கான தனிப்பட்ட உணவியல் நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது.