தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுத் துறையில் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முக்கியமான மாற்றம் அமலுக்கு வர உள்ளது. இதுவரை சொத்து தொடர்பான பத்திரங்களை பதிவு செய்யும்போது அசல் மூலப் பத்திரத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக இருந்தது. இந்த விதி பதிவுச் சட்டத்தின் 34(சி) பிரிவின் கீழ் நடைமுறையில் இருந்தது. அசல் ஆவணம் இல்லாத நிலையில், காவல்துறை சான்றிதழ், நாளிதழ் விளம்பரம் அல்லது பரம்பரைச் சொத்தாக இருந்தால் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை வழங்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
இந்த நடைமுறையால் குறிப்பாக பரம்பரைச் சொத்துகளின் உரிமையாளர்கள் கடும் சிரமங்களை சந்தித்தனர். பல ஆண்டுகளாக பழைய மூலப் பத்திரங்களை கண்டுபிடிக்க முடியாமல் பத்திரப் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, 34(சி) பிரிவை ரத்து செய்யக் கோரி அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்க கூட்டமைப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 34(சி) பிரிவு துணைப் பதிவாளர்களுக்கு அவர்களின் அதிகார வரம்பை மீறிய அதிகாரங்களை வழங்குவதாகக் குறிப்பிட்டனர். ஒரு சொத்து பூர்வீகச் சொத்தா, கூட்டுக் குடும்பச் சொத்தா போன்ற உரிமையியல் கேள்விகளை தீர்மானிப்பது நீதிமன்றங்களின் அதிகாரம் என்றும், அதை துணைப் பதிவாளர்கள் முடிவு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், இந்த சட்டப்பிரிவு இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பு, அதிகாரப் பகிர்வு கோட்பாடு மற்றும் சொத்துரிமை பாதுகாப்பு தொடர்பான விதிகளுக்கு முரணானது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதன் அடிப்படையில், பதிவுச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 34(சி) பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதன் மூலம் இனி அசல் மூலப் பத்திரம் இல்லாவிட்டாலும் சொத்துப் பத்திரங்களை பதிவு செய்ய முடியும். இந்த தீர்ப்பு பொதுமக்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளதுடன், பத்திரப் பதிவுக்காக பழைய ஆவணங்களை தேடி அலையும் சிரமத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
