கடந்த மே 2-ம் தேதி மதுரை ஆதீனம் மதுரையில் இருந்து காரில் சென்னை புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தன்னை கொல்ல சதி நடப்பதாகவும், விபத்துக்கு காரணமான வாகனம் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துடன் இருந்ததாகவும் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இருந்த CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஆதீனம் சென்ற கார் தான் மற்றொரு வாகனத்தின் மீது உரசியது தெரியவந்தது. இதையடுத்து கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இரு மதங்களுக்கிடையே கலவரத்தை தூண்டும் விதமாக மதுரை ஆதீனம் பேசியதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் தந்தை பெரியார் திராவிட கழகம் உட்பட பல அமைப்புகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.