காதல் கோட்டையான கொரோனா பரிசோதனை மையம்

48
Advertisement

எப்ப வரும், எப்படி வரும், எந்த வயதில் வரும், எந்தச் சூழலில் வரும்
என்று சொல்லமுடியாதது காதல். பள்ளியில் படிக்கும்போதும் வரலாம்,
கல்லூரியில் பயிலும்போதும் வரலாம். பணிபுரியும் இடத்திலும் வரலாம்,
பேஸ்புக் சாட்டிங் மூலமும் வரலாம். ராங் போன் கால்மூலமும் வரலாம்.

ஆனால், கொரோனா பரிசோதனை மையத்தில் தோன்றிய காதல்
அனைவரையும் ஆச்சயரித்தில் மூழ்கவைத்துள்ளது.

கேரள மாநிலம், கொச்சி நகரில் நடந்த கொரோனா பரிசோதனை
மையத்தில் சந்தித்துக்கொண்ட கணவரை இழந்த 68 வயது பாட்டியும்,
மனைவியை இழந்த தாத்தாவான 73 வயது கேட்டரிங் உரிமையாளரும்
காதல் வயப்பட்டுக் கல்யாணம் செய்துகொண்ட விநோத நிகழ்வு
இக்காலக் காதல் விரும்பிகளுக்கு ஊக்கமளித்துள்ளது.

Advertisement

கொச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு சென்ற ஆண்டு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்தார் காக்க நாடு
பகுதியைச் சேர்ந்த வர்கீஸ். பிரபல கேட்டரிங் உரிமையாளரான
இவருக்குத் திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.

மூவருக்கும் திருமணமாகி வெளிமாநிலங்களில் வசித்துவருகின்றனர்.
இதற்கிடையே இவரது மனைவி 3 ஆண்டுகளுக்குமுன் இறந்துவிட்டார்.
இதனால் தனிமையில் வசித்துவந்தார்.

இவரைப்போல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அந்த மருத்துவ
மையத்துக்கு வந்திருந்தார் அஸ்வதி. லண்டனில் டாக்டராக சேவை புரிந்துவந்த
இவரது கணவர் இரண்டாண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்தினார். அஸ்வதியோ
கொச்சியில் அழகு மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

தாத்தாவும் பாட்டியும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது. மனம்விட்டுப் பேசினர்.
காதலை வெளிப்படுத்தினர். கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே
ஆக வேண்டும், கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

பெற்றோரின் சம்மதம் வேண்டுமே… சாரி பிள்ளைகளின் சம்மதம் வேண்டுமே…
இந்த வயசுல உனக்கெதுக்கு காதல், கத்தரிக்காய் என்றெல்லாம் பிள்ளைகள்
முகம் சுளிக்கவில்லை. பெற்றோரைத் தங்கள் குழந்தைகளாகவே கருதினர்.
பெற்றோரின் காதலுக்குப் பச்சைச்கொடி காட்டினர்.

அப்புறமென்ன…?

இருவரின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என்று இருவீட்டார்
முன்னிலையில் 20பேர் கலந்துகொள்ள இந்த லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ்
ஜாம் ஜாம்னு அமர்க்களமாக நடந்தது.

காதலுக்கு வயதும் ஒரு தடையல்ல. காதலை வெளிப்படுத்த இடமும்
ஒரு தடையல்ல. ஆகவே, உங்களுக்குள் காதல் பட்டாம்பூச்சி சிறகடிக்கத்
தொடங்கிவிட்டால், தைரியமாக உங்கள் காதலியிடம் வெளிப்படுத்துங்கள்.
மனதிலேயே காதல்கோட்டை கட்டாதீர்கள். இதயத்தோடு காதலை அழுத்தாதீர்.

சொல்லித் தொலைத்துவிடுங்கள் காதலை…
சொல்லாத காதல் வெற்றிபெறுவதில்லை….