அமெரிக்கா, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு புதிய வரிகளை விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவில் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த வரிவிதிப்பு மற்றும் அதன் விளைவுகளை எதிர்த்து, கனடா அரசு ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டது. அந்த வீடியோவில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், ‘வரிவிதிப்புகள் வர்த்தக போர்களுக்கு வழிவகுக்கும்’ என்று கூறிய பழைய உரை இடம்பெற்றிருந்தது.
ஆனால், அந்த காட்சிகள் முறையற்ற முறையில் Edit செய்யப்பட்டவை என ரீகன் அறக்கட்டளை விளக்கம் அளித்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடன் நடைபெற்று வந்த அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தக விவாதங்களை தொடங்க தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நிருபர்களிடம் பேசிய அவர், ‘கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை நன்கு பிரித்து பார்க்க வேண்டும். அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளை நாங்கள் மாற்ற முடியாது; ஆனால், அவற்றை ஆக்கப்பூர்வமாக அணுக முயலலாம்’ என்றார்.
மேலும், ‘எங்கள் அதிகாரிகள் அனைத்து நிலைகளிலும் விவாதங்களை முன்னெடுக்கத் தயாராக உள்ளனர். அமெரிக்காவும் விரைவில் நேர்மையான பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் என நம்புகிறோம்,’ என்று மார்க் கார்னி வலியுறுத்தினார்.
இந்த அறிக்கை இரு நாடுகளின் உறவில் புதிய மாற்றத்துக்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.
