கார் வைத்திருப்பவர்கள் அனைவரும் எங்கு காரை நிறுத்தினாலும் லாக் செய்துவிட்டுத்தான் செல்வார்கள். ஆனால், ஒரு நகரில் மட்டும் காரை எந்த இடத்தில் நிறுத்தினாலும் பூட்டாமலேயே செல்வார்களாம்…
அது எந்த நகரம்……எதற்காக இப்படிச்செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம், வாங்க…
கனடாவில் உள்ளது சர்ச்சில் என்னும் நகரம். நகரம் என்று அந்நாட்டில் குறிப்பிட்டாலும் வெறும் 900 பேரே வசித்துவருகின்றனர். அதேசமயம், மக்கள் தொகையை மிஞ்சியுள்ளன துருவக் கரடிகளின் எண்ணிக்கை.
அதாவது, 935 துருவக்கரடிகள் இந்தப் பகுதியில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளார்கள். உலகிலேயே இங்குதான் துருவக் கரடிகள் அதிகம் என்பதால், துருவக் கரடிகளின் தலைநகரம் என சர்ச்சில் நகரை வேடிக்கையாக அழைக்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.
இந்த நகருக்கு அருகில் உள்ள ஹட்சன் விரிகுடாவில் வெயில் காலத்தில் பனி உருகத் தொடங்கிவிடும். அந்த சமயத்தில் அடிக்கடி சர்ச்சில் நகருக்குள் புகுந்துவிடுமாம். இந்த சர்ச்சில் நகரில் துருவக்கரடிகள் தாக்கி மனிதர்கள் பலர் இறந்துள்ளனர்.
இந்த நகரில் துருவக்கரடிகள் சர்வசாதாரணமாக சாலைகளில் உலா வருமாம். அப்படி உலா வரும்போது மனிதர்களைக் கண்டால் தாக்காமல் செல்லாதாம். அந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு வழியைப் பின்பற்றி வருகின்றனர் அங்குள்ள மக்கள்.
அதுதான் காரை லாக் செய்யாமல் சாலையிலேயே விட்டுவிடுவது.
துருவக்கரடிகள் தங்களைத் தாக்கத் துரத்தினால், ஓடிச்சென்று காருக்குள் அமர்ந்து, உட்பக்கமாகப் பூட்டிக்கொண்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்வார்களாம்.
அப்போது காருக்குள் எட்டிப்பார்க்க முயலுமாம். காருக்குள் புகமுடியாததால் திரும்பிச்சென்றுவிடுமாம். அவை சென்றபிறகுதான், காரைத் திறந்துகொண்டு வெளியே வருவார்களாம்…
இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை யாரும் துருவக் கரடித் தாக்குதலால் இறந்ததில்லையாம்.
தஞ்சம் பெறுவதற்காக சர்ச்சில் நகர் மக்கள் பின்பற்றிவரும் இந்த விநோத வழக்கம் தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.