நெல்லை அருகே, வீட்டிற்குள் சிறுத்தை புகுந்து கோழிகளை தாக்க முயன்றதால் மக்கள் அச்சமடைந்தனர். பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பொதிகையடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். மின்வாரிய ஊழியரான இவர், தனது வீட்டில் கோழி, புறா, நாய் போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்.
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு சங்கரின் வீட்டிற்குள் நுழைந்து, கோழிக்கூண்டு மீது ஏறி, கோழிகளை தாக்க முயன்றுள்ளது. அதை பார்த்து சங்கர் மற்றும் குடும்பத்தினர் கூச்சலிட்டதும் சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.
இதனால், வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி, வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.