அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் எல்லாம் விடுங்க! ‘இன்னொரு போருக்கு தயாராகும் இந்தியா!

“இந்தியா இன்னொரு போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது!” என்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி ஸர்தாரி நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், “நான் எப்போதும் பிராந்திய அமைதியை விரும்புபவன். ஆனால், இந்தியத் தலைவர்கள் மீண்டும் ஒரு போருக்குத் தயாராகிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. இது நல்லதல்ல, இதை நான் பரிந்துரைக்க மாட்டேன்” என்று எச்சரித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) தாக்குதலின் போது, இந்தியா பாகிஸ்தானுக்குக் கொடுத்த பதிலடி இன்னும் ஆறாத வடுவாக இருக்கும் நிலையில், ஸர்தாரியின் இந்தப் பேச்சு எல்லையில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்தியத் தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை என்றாலும், ஸர்தாரி ஆப்கானிஸ்தான் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கிறார்கள் என்று ஐ.நா அறிக்கையே சொல்கிறது. அண்டை நாடுகள் எங்கள் அமைதியைக் குலைக்க நினைத்தால், அதை வேடிக்கை பார்க்க மாட்டோம்” என்று அவர் கர்ஜித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு, பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும், தோஹா ஒப்பந்தத்தை அவர்கள் வசதியாக மறந்துவிட்டதாகவும் ஸர்தாரி சாடியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலையும் அவர் கடுமையாகக் கண்டித்துள்ளார். “பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே ஈரான் மீது போர் தொடுப்பது தவறு. எங்கள் சகோதர நாடான ஈரானின் இறையாண்மைக்கு பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும்” என்று அவர் உறுதி அளித்துள்ளார். மேலும், வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களையும் கண்டித்த அவர், பாலஸ்தீனத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் ஸர்தாரி பேசிக் கொண்டிருக்கும்போதே, எதிர்க்கட்சியினர் “கோ ஸர்தாரி கோ” (Go Zardari Go) என்றும், “இம்ரான் கானை விடுதலை செய்” என்றும் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். சொந்த நாட்டிலேயே எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஸர்தாரி, இந்தியாவைக் காட்டித் திசை திருப்பப் பார்க்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related News

Latest News