பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு குறித்த ‘தேசிய தலைவர்’ படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வக்குமார் என்பவரும் திரைப்படத்திற்கு எதிராக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “இந்தத் திரைப்படம் வெளியாவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் தீவிரமான வாய்ப்புள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, திரைப்படத்தை வெளியிடவோ அல்லது வெளியிட அனுமதிக்கவோ கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அவர் கோரி உள்ளார்.
இதே போல பரமக்குடியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘தேசிய தலைவர்’ என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பஷிர் நடித்துள்ளார். ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார்.
இதில் சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் சில வசனங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிக்கடி சாதி மோதல்கள் நடக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய வசனங்களுடன் படத்தை வெளியிடுவது மீண்டும் மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே இந்த படத்துக்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கக் கூடாது, வழங்கியிருந்தால் அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
‘தேசியத் தலைவர்’ படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட 2 பொதுநல வழக்குகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
