சமூக வலைதளங்களில் திடீரென சில விஷயங்கள் வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடும். அந்த லிஸ்டில் லேட்டஸ்ட்டாக கூமாபட்டி என்னும் கிராமம் இணைந்துள்ளது. அந்த ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் தோல்வி, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு சிறந்த அருமருந்து கூமாபட்டி தான் என்று, தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாக, இதைப்பார்த்த சுற்றுலாவாசிகள் எங்கே தான்பா இருக்கு அந்த கூமாபட்டி? என்று வெறிகொண்டு தேடி வருகின்றனர். அந்தவகையில் தென் மாவட்டத்தின் தனித்தீவு என்று புகழப்படும் கூமாபட்டி குறித்து இங்கே பார்க்கலாம். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமம் தான் இந்த கூமாபட்டி.
தேனி – தென்காசி மாவட்டங்களுக்கு இடையே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி இந்த கிராமம் இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள பெரியாறு மற்றும் கோயிலாறு அணையின் நீர் மூலம் உருவான தாமரைக் குளம் தான் இந்த கூமாப்பட்டியின் அழகாக கூறப்படுகிறது. வீடியோவில் அந்த இளைஞர், ” தண்ணி சர்பத் மாதிரி இனிக்குதுங்க” என்று சொல்லும் குளம் இதுதானாம்.
கிராமத்தை சுற்றி பிளவாக்கல் அணை, செண்பகத் தோப்பு அணில் சரணாலயம், அய்யனார் அருவி, சதுரகிரி மலை, சஞ்சீவி மலை போன்ற சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. ஊட்டி, கொடைக்கானலுக்கு போய் அலுத்து விட்டது என்று புலம்புபவர்களுக்கும், இயற்கை விரும்பிகளுக்கும் நல்லதொரு சாய்ஸ் இந்த கூமாபட்டி.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு, சுற்றுலாவாசிகள் தற்போது இங்கு கூட்டம், கூட்டமாக படையெடுக்க ஆரம்பித்து இருக்கின்றனராம். இதனால் விரைவில் இந்த கிராமம் பிரபல சுற்றுலாத் தலமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.