7 வாரங்களாக அடக்கம் செய்யப்படாத ‘கமேனி’ உடல்: என்ன நடக்கிறது ஈரானில்?

ஈரானின் மிக உயரிய தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டு ஏழு வாரங்கள் கடந்துவிட்டன. ஒரு நாட்டின் தலைவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற்று, உடல் அடக்கம் செய்யப்படுவது என்பது அந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் அரசியல் மரபு. ஆனால், ஏழு வாரங்கள் கடந்தும், கமேனியின் உடல் இன்னும் அடக்கம் செய்யப்படாமல் இருப்பது, சர்வதேச அளவில் பெரும் மர்மத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக 1989-ஆம் ஆண்டு கமேனியின் முன்னோடி அயத்துல்லா ருஹோல்லா கொமேனி இறந்தபோது, லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். ஆனால், கமேனி விஷயத்தில் அத்தகைய ஒரு இறுதிச்சடங்கைக்கூட ஈரானால் ஏன் நடத்த முடியவில்லை என்பதுதான் இப்போதைய பெரிய கேள்வி.

பாதுகாப்பு நிபுணர்கள் இதற்குப் பின்னால் ஒரு பெரும் அச்சம் இருப்பதாகக் கூறுகிறார்கள். இது போரினால் ஏற்பட்ட காலதாமதம் மட்டுமல்ல, ஈரான் அரசு தங்களின் மீதான தேசியவாதக் கொந்தளிப்பு மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு அஞ்சி, கமேனியின் உடலை அடக்கம் செய்யத் தயங்குவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், புதிய உச்சகட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி எங்கே இருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை.

ஒருவேளை தந்தையின் உடலை அடக்கம் செய்யும் நிகழ்வை நடத்தினால், அது மக்கள் மத்தியில் பெரும் போராட்டங்களுக்கு வித்திடும் என்று ஈரான் ஆட்சி அஞ்சுவதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே, தெஹ்ரானுக்குப் பதிலாக, கமேனியின் சொந்த ஊரான மற்றும் இஸ்ரேல் எல்லைக்கு வெகு தொலைவில் உள்ள மஷ்ஹத் நகரத்தில் அவரை அடக்கம் செய்ய ஈரான் ஆலோசித்து வருகிறது.

ஈரான் தனது கட்டுப்பாட்டில் தான் தெருக்கள் இருப்பதாகத் தம்பட்டம் அடித்தாலும், 50 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் இணைய முடக்கம், ஈரானின் உண்மை நிலையை உலகுக்குத் தெரியவிடாமல் தடுக்கும் ஈரானின் பயத்தையே காட்டுகிறது. அணு ஆயுதத் திட்டங்களில் பிடிவாதம் காட்டும் ஈரான், தங்களின் தலைவரின் இறுதிச் சடங்கைக் கூட நடத்த முடியாமல் தவித்து வருவது, அந்த நாட்டு ஆட்சியில் நிலவும் பெரும் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது. ஈரானின் இந்த மர்மமான மௌனம் எதை நோக்கிச் செல்லப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News