கடந்த சில நாட்களாக உலக அரசியலில் ஈரான் நாட்டின் உச்சபட்சத் தலைவர் முஜ்தபா காமேனி பற்றிப் பல பரபரப்பான செய்திகள் பரவி வந்தன. அவர் காயமடைந்திருக்கிறார், அவர் உயிருடன் இல்லை எனச் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. ஆனால், இந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஈரான் தரப்பிலிருந்து ஒரு மிக முக்கியமான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள ஈரான் நாட்டின் துணைத் தூதரக அதிகாரி டாக்டர் முகமது ஹுசைன் ஜியாயினியா(Dr. Mohammad Hossein Ziyaeenia), இந்த வதந்திகள் குறித்துப் பகிரங்கமாக மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் மிகத் தெளிவாக என்ன சொல்லியிருக்கிறார் என்றால், “எங்கள் தலைவர் மொஜ்தபா காமேனி மிக நலமாக இருக்கிறார், பாதுகாப்பாக இருக்கிறார்” என்று உறுதிப்படுத்தியிருக்கிறார். சமூக வலைதளங்களிலும், சில ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை, அவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அவருடன் சில நாட்களுக்கு முன்புதான் தாங்கள் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல், ஈரான்-அமெரிக்கா போரைப் பற்றிய ஈரானின் உறுதியான நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார். “நாங்கள் இந்த போரைத் தொடங்கவில்லை. ஆனால், இந்த போர் எப்போது, எப்படி முடிய வேண்டும் என்பதை எங்களால்தான் முடிவு செய்ய முடியும்” என்று அவர் கூறியிருப்பது, ஈரான் தனது ராணுவ மற்றும் அரசியல் நிலைப்பாட்டில் இப்போதும் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஈரான் நாட்டுக்குள் குழப்பங்கள் இருப்பதாகப் பரப்பப்படும் செய்திகளை அவர் முற்றிலும் மறுத்துள்ளார். ஈரானிய மக்கள் ஒன்றுபட்டு இருப்பதாகவும், இது போன்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் உண்மையை மறைக்க முயல்கிறார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.
மொஜ்தபா காமேனி பொதுவெளியில் ஏன் தோன்றவில்லை என்பதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், அவர் உயிருடன் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை ஈரான் அரசு இப்போது அதிகாரப்பூர்வமாகவே உறுதிப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம், கடந்த சில நாட்களாகக் கிளம்பிக் கொண்டிருந்த வதந்திகளுக்குப் பெரிய முற்றுப்புள்ளி விழுந்துள்ளது.
