த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்தார்.
நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துவிட்டு கரூரில் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு
கூட்டநெரிசலின் காரணமாக 39 பேர் பலியானார்கள். இதில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீதும் கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.