Tuesday, July 15, 2025

“சோறுபோட்டா பள்ளிக்கூடம் போவியா” : கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த தினம் இன்று

தன்னலமற்ற தலைவர் காமராஜர் பிறந்த தினம் ஜூலை 15. எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உழைப்பாலும் தன்னலமற்ற நாட்டுப்பற்றாலும் நாடு போற்றும் நல்ல தலைவராக விளங்கினார்.

காமராஜர் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி விருதுநகரில் குமாரசாமி-சிவகாமி அம்மையார் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். காமராஜர் பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அவருடைய பிறந்த நாளான இன்று அவரைப்பற்றி சில சுவாரஸ்ய சம்பவங்களை இதில் பார்ப்போம்.

காமராஜர் சேரன்மாதேவியில் சுற்றுப்பயணம் சென்ற போது சாலை ஓரம் மாடுமேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை பார்த்து காரை நிறுத்த சொன்னார். இறங்கி அந்த பையனிடம் சென்று “ஏம்பா பள்ளிக்கூடம் போகாம மாடு மேய்க்கிறியே..” என்று கேட்டார்.. அந்த சிறுவன் “பள்ளிக்கூடம் போனா சோறு யாரு போடுவாங்க.. மாடு மெய்ச்சாதான் சோறு” என்றானாம். “சோறுபோட்டா பள்ளிக்கூடம் போவியா…” என்றிருக்கிறார்… “ஓ .. போவேனே..” என்றானாம்.

உடனே சென்னை திரும்பியதும் பொதுக்கல்வி இயக்குனராக இருந்த திரு என்.டி சுந்தரவடிவேல் அவர்களை அழைத்து பள்ளிக்கூடத்தில் மதியம் சாப்பாடு போடுவதற்கு ஒரு திட்டம் கேட்டிருக்கிறார். ஒரு குழந்தைக்கு இரண்டு அனா செலவில் என் டி சுந்தரவடிவேல் அவர்கள் ஒரு திட்டத்தை வரையறை செய்து கொடுத்தாராம். அதுதான் மதியஉணவு திட்டம்.

ஒருமுறை திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு ரெயில்வே கிராசிங்கை சென்றடைந்தது முதல்வர் காமராஜரின் வாகனம். சற்று நேரத்தில் ரயில் கடக்கவேண்டியதாகையால் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ஒரு அதிகாரி வேகமாக கேட் கீப்பரிடம் போய் முதல்வர் வாகனம் வருகிறது. கேட்டை திறந்துவிடு என்று சொன்னார்.

இதை கவனித்த காமராஜர், அந்த அதிகாரியை கூப்பிட்டு “ஏன்யா..நான் ரயில்ல அடிபட்டு சாகனுமா? ரயில் வரப்போ அதுல யாரும் மாட்டிக்க கூடாதுன்னுதானே ஒரு கேட்டும் போட்டு அதுக்கு ஒரு ஆளும் போட்டிருக்கோம். அப்புறம் ரயில் வர நேரத்துல நீ கேட்ட தொறக்க சொன்னா என்ன அர்த்தம்னேன்” என்று கேட்டாராம்.

ரயில் கடந்ததும் காரில் இருந்து இறங்கி அந்த கேட்கீப்பரிடம் செல்ல, அந்த கேட்கீப்பர் வெலவெலத்துப்போனாராம், நீ செஞ்சதுதான் சரின்னேன். இந்த இடத்துக்கு நீதான் எஜமான். உன் வேலைய நீ கரெக்டா தான் பன்னேன்னேன்.” என்றாராம்.

திண்டுக்கல் நகரத்தில் இருந்து உள்ளடங்கிய பகுதியில் ஒரு பஞ்சு மில் திறக்க அனுமதி அளித்தார் காமராஜர். அவ்வளவு தூரம் உள்ளடங்கி இருக்குங்கைய்யா, அதுக்கு அனுமதி கொடுக்க சொல்றீங்களே? என அதிகாரி ஒருவர் கேட்டாராம். அதெல்லாம் நான் பேசிட்டேன். திண்டுக்கல்ல இருந்து அவன் செலவுலேயே கரெண்டு எடுத்துக்கிறேன்னு சொல்றான். அந்த வழில இருக்க அறுபது கிராமத்துக்கும் கரெண்டு எடுத்துக்கலாம்னேன் என்றாராம் காமராஜர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news