‘எடியூரப்பா’ போல விஜய்க்கும் – 24 மணி நேரம் ‘அவகாசம்’ வழங்கப்படுமா?

கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு நடந்தது போல, விஜய்க்கும் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக தேர்தலில் 104 இடங்களைப் பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், இது பெரும்பான்மைக்குத் தேவைப்பட்ட 112 இடங்களை விட 8 இடங்கள் குறைவாகும். எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அப்போதே ஆளுநர் அழைப்பு விடுத்தார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தார்.

இதனை எதிர்த்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அவசர மனுத் தாக்கல் செய்தது. அதில் குதிரை பேரம் நடக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அதில் குதிரை பேரத்தைத் தவிர்க்க உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறி, 15 நாள் அவகாசத்தை வெறும் 24 மணிநேரமாகக் குறைத்து உத்தரவிட்டது.

பெரும்பான்மைக்குத் தேவையான 112 இடங்கள் இல்லாததால், எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே உணர்ச்சிகரமாகப் பேசி தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அதேபோன்ற ஒரு நெருக்கடியில் தவெக தலைவர் விஜய் இருக்கிறார். எடியூரப்பா போல விஜய்க்கும் 15 நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்து, எதிர்க்கட்சிகள் அதை விரும்பாமல் நீதிமன்றம் சென்றால் 24 மணி நேரத்தில் விஜய் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் சேர்த்து விஜய்யின் கைவசம் தற்போது 113 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் அவருக்கு 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். விஜய்யின் நிலையறிந்து அவருக்கு சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகள் ஆதரவு அளித்தால் அவரால் முதல்வராக பதவியேற்க முடியும். ஒருவேளை தேவைப்படும் ஆதரவு எம்எல்ஏக்களை அவரால் பெற முடியவில்லை என்றால், மீண்டும் தமிழ்நாட்டில் மறுதேர்தல் நடத்தப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

Related News

Latest News