Sunday, July 27, 2025

மனசுல என்ன நெனைச்சிட்டு இருக்க? களத்திலேயே கொந்தளித்த சிராஜ்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றுள்ளது. 5 சதங்களை அடித்தும்கூட இந்தியாவால் டெஸ்ட் போட்டியை வெல்ல முடியவில்லை. 148 கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகவும் மோசமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் பும்ரா தவிர்த்து வேறு பவுலர்கள் யாரும் சிறப்பாக பந்து வீசவில்லை. அத்தோடு கைக்கு வந்த கேட்ச்களை பீல்டர்கள் தவற விட்டதும் இதற்கு முக்கிய காரணமாகி இருக்கிறது. சிறந்த பீல்டர் என புகழப்படும் ரவீந்திர ஜடேஜா கூட கேட்ச்களை தவறவிட்டு அதிர்ச்சி அளித்தார்.

ஆனால் இளம்வீரர் ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக 4 கேட்ச்களை தவறவிட்டு, இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்துள்ளார். முதல் இன்னிங்சில் பும்ராவின் பந்துகளில் கேட்சை தவறவிட்ட ஜெய்ஸ்வால், 2வது இன்னிங்சில் சிராஜ் பந்தில் பென் டக்கெட் கொடுத்த கேட்சை நழுவவிட்டார். டக்கெட் 98 ரன்னில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்ட டக்கெட், 149 ரன்களை விளாசி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். இந்தநிலையில் ஜெய்ஸ்வால் கேட்சை தவறவிட்டபோது சிராஜ் அவரை திட்டிய வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதேபோல டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும், கோபமாகி முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ” சதமடிச்சா மட்டும் பத்தாது. பீல்டிங்கும் ஒழுங்கா செய்யணும், ” என ஜெய்ஸ்வாலை வறுத்தெடுத்து வருகின்றனர். ஒரு பீல்டர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கு கேட்ச்களை, தொடர்ச்சியாக தவறவிடுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News