Monday, May 5, 2025

‘வில்லனாக’ மாறிய ஜடேஜா – செம ‘காண்டில்’ CSK ரசிகர்கள்

இதுவரை மோசமாக தோல்விகளை சந்தித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், முதன்முறையாக கையில் இருந்த வெற்றியை பறிகொடுத்து ஏமாந்து நிற்கிறது. மே 3ம் தேதி பெங்களூருவின் சின்னச்சாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

பெங்களூரு ஹேசல்வுட்டிற்கு பதிலாக லுங்கி நிகிடியை எடுத்து வந்தது. சென்னை அதே பிளேயிங் லெவனுடனேயே களம் கண்டது. ஆரம்பத்தில் அதிரடி காட்டிய RCBயை, CSK பவுலர்கள் அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

என்றாலும் கடைசியில் களமிறங்கிய ரோமாரியோ, 14 பந்தில் 53 ரன்கள் குவித்து சூறாவளியாக மிரட்டி விட்டார். இதனால் 214 ரன்களை சென்னை அணி சேஸிங் செய்யும்படி ஆகிவிட்டது. ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா அதிரடி காட்டினாலும், கடைசியில் சொதப்பியதால் வெறும் 2 ரன் வித்தியாசத்தில், சென்னை தோல்வியைத் தழுவியது.

இதற்கு சென்னை வீரர் ஜடேஜா முக்கிய காரணமாக மாறியுள்ளார். ஏனெனில் டெவால்ட் பிரேவிஸ் டக்அவுட் ஆனதற்கு, அவர்தான் முழுக்காரணம். லுங்கி நிகிடி வீசிய 17வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட பிரேவிஸ், அதை சிங்கிள் தட்டிவிட்டு எதிர்முனைக்கு ஓடினார்.

அப்போது நிகிடி LBW கேட்க அம்பயரும் அவுட் கொடுத்து விட்டார். ஆனால் ரன் எடுக்க பிஸியாக ஓடிக்கொண்டிருந்த ஜடேஜா, பிரேவிஸ் இருவரும் இதை கவனிக்கவில்லை. அதற்குள் ரிவியூ டைம் முடிந்து விட்டது. இதனால் சென்னை அணியால் DRS எடுக்க முடியவில்லை.

பின்னர் ரீபிளேயில் அது அவுட் இல்லை என தெரிய வந்தது. அந்த தவறான அவுட்டால் சென்னை அணியும் கையில் இருந்த போட்டியை பறிகொடுத்தது. ஜடேஜா 2வது ரன்னுக்கு அழைக்காவிட்டால், பிரேவிஸ் நிச்சயம் முன்னதாக DRS எடுத்து விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டிருப்பார்.

அவரின் கவனக்குறைவே DRS வாய்ப்பை இழந்து, பிரேவிஸ் வெளியேறியதற்கு முக்கிய காரணமாகும். இதனால் சென்னை ரசிகர்கள் ஜடேஜா மேல் செம காண்டில் இருக்கின்றனர்.

Latest news