‘வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல’ மீண்டும்’ ஒரு தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துள்ளது. நடப்பு IPL தொடரில் தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து, ”அவ்வளவு தான் நம்மள முடிச்சு விட்டீங்க’ மோடுக்கு சென்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தாலும் கூட, அந்த அணியின் இளம்வீரர் பிரியன்ஷ் ஆர்யா 39 பந்தில் சதமடித்து மிரட்டி விட்டார். சொல்லப்போனால் சென்னையின் தோல்விக்கு அவரின் சதமே முக்கியக் காரணமாகும்.
ஏலத்தின்போது சென்னை நிராகரித்த வீரர்களில், ஆர்யாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் போட்டியின்போது நடந்த ஒரு சம்பவம், சொந்த ரசிகர்களையே வெறுப்பேற்றி உள்ளது. மீண்டும் அணிக்குத் திரும்பிய டெவன் கான்வே, பஞ்சாப்புக்கு எதிராக 49 பந்தில் 69 ரன்கள் எடுத்தார்.
கடைசியாக சென்னையின் வெற்றிக்கு 13 பந்தில் 49 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நல்ல பார்மில் இருந்த கான்வேவை Retired Out முறையில் வெளியேற்றி, அவருக்குப் பதிலாக ஜடேஜாவை CSK களமிறக்கியது. என்றாலும் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியைத் தழுவியது.
இதைப்பார்த்த ரசிகர்கள், ”ஜடேஜா ஒன்றும் பெரிய பவர்ஹிட்டர் கிடையாது. அப்படியிருக்க கான்வேவை ஏன் வெளியேற்றினர்?, டிவியை விற்று ரிமோட்டை வாங்கிய கதை தான். கான்வேவிற்குப் பதிலாக ஜடேஜாவை இறக்கியது,” என்று சமூக வலைதளங்களில், கொந்தளித்து வருகின்றனர்.
முன்னதாக லக்னோவிற்கு எதிரான போட்டியில் மும்பை அணி, நன்றாக ஆடிக்கொண்டிருந்த திலக் வர்மாவை வெளியேற்றி, அவருக்குப் பதிலாக மிட்செல் சாண்ட்னரை களமிறக்கியது. ஆனால் சாண்ட்னர் பெரிதாக பெர்பார்ம் செய்யவில்லை என்பதால், அந்த போட்டியில் மும்பை தோல்வியை சந்தித்தது.